

டெல்லி,
மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வித்துறை கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதேவேளை, மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய கிழக்கில் போர் நிலவி வந்தது.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில தேர்வுகள் போர் சூழ்நிலையில் நடந்ததால் மாணவ, மாணவியர் சரிவர தேர்வு எழுத முடியாமல் குறைவான மதிப்பெண் எடுக்கும் சூழ்நிலையும் உருவானது. இதனை தொடர்ந்து விடுபட்ட தேர்வுகள் மற்றும் மாணவ, மாணவியர் போரால் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததை கருத்தில் கொண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 28ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நாட்டிற்கு தலா ஒரு தேர்வு மையம் வீதம் தேர்வு மையம் ஒதுக்கப்படும். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களே மாணவ, மாணவியர் பெறும் இறுதி மதிப்பெண்களாக கணக்கில் கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.