

புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.
இந்நிலையில், மத்திய கிழக்கின் பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் தற்போது காணப்படும் சூழலால் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, மார்ச் 1, 3, 5, 7, 9 மற்றும் 16 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புகளுக்காக மார்ச் 3, 5, 6, ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும், 7 முதல் 11 வரையிலான நாட்களில் நடக்க இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டு மொத்தத்தில் வளைகுடா நாடுகளில் நடக்க இருந்த, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.