

புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்(OSM) என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்ததாகவும், விடைத்தாள்கள் மாறியதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. தேர்வு குளறுபடிகளுக்கு தானே பொறுப்பேற்பதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.எஸ்.இ. தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டுதான் உள்ளது. ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், யாரும் தப்பிக்க முடியாது என்று நான் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.
ஆனால் ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, அவர் வேறு ஒரு மனநிலைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால், அவர் விரக்தியடைந்துள்ளார். அவர் எஸ்.ஐ.ஆர். பணிகளை எதிர்த்தார், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எதிர்த்தார், மேலும் டிஜிட்டல் இந்தியாவையும் எதிர்த்தார். அவர் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஆதரவாக நிற்பதாகத் தெரியவில்லை.
சி.பி.எஸ்.இ. விவகாரத்தைப் பொறுத்தவரை, ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் அரசின் சார்பாக நானே பொறுப்பேற்கிறேன். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இதை நான் முன்பும் கூறியுள்ளேன். அரசியலை பிறகு செய்துகொள்ளலாம். இப்போது, மாணவர்கள் மற்றும் தேர்வர்களின் மன அழுத்தம் மேலும் அதிகரிக்கக் கூடாது என்பதே மிக முக்கியமான விஷயம். யாருடைய வார்த்தைகளோ அல்லது நடத்தையோ அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கக் கூடாது என்று நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.