சிபிஎஸ்இ வினாத்தாள் விவகாரம்: நேற்று இரவு தூங்கவில்லை - ஜவடேகர்; ராஜினாமா செய்யுங்கள் - காங்கிரஸ்

சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #CBSEPaperLeak #CBSE
சிபிஎஸ்இ வினாத்தாள் விவகாரம்: நேற்று இரவு தூங்கவில்லை - ஜவடேகர்; ராஜினாமா செய்யுங்கள் - காங்கிரஸ்
Published on

புதுடெல்லி,

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களால், இதை ஜீரணிக்க முடியவில்லை. வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வினாத்தாள் வெளியானது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில் மிகவும் துரதிஷ்டவசமானது என்றார்.

வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, போலீஸ் தீவிரமான நடவடிக்கையில் இறங்கிஉள்ளது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. துறை ரீதியான விசாரணையும் முன்னெடுக்கப்படுகிறது என்றார் ஜவடேகர். மாணவர்கள், பெற்றோர்கள் கவலை அடைந்து உள்ளது தொடர்பாக அவர் பேசுகையில், உங்களுடைய வலி, துயரங்கள் மற்றும் ஏமாற்றங்களை புரிந்துக்கொள்கிறேன். நாங்கள் உங்களுடன் உள்ளோம். உங்களுடைய கடினமான நிலையை புரிந்துக்கொள்கிறேன். பெற்றோராக நானும் நேற்று இரவு தூங்கவில்லை. வினாத்தாள் கசியாமல் நேர்மையான தேர்வை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

காங்கிரஸ் வலியுறுத்தல்

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது மாணவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என காங்கிரஸ் கூறிஉள்ளது.

மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், சிபிஎஸ்இ சேர்மன் அனிதா காவால் ராஜினாமா செய்ய வேண்டும், இவ்விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கூறிஉள்ளார். போலீசார் இரு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com