சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; சென்னை மண்டலம் 2-வது இடம்

95 சதவீதம் மற்றும் அதற்கு கூடுதலாக மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை 17,113 பேர் (0.97 சதவீதம்) என்ற அளவில் உள்ளது.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; சென்னை மண்டலம் 2-வது இடம்
Published on

புதுடெல்லி

2026-ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு பிப்ரவரி 17-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9 மற்றும் 10-ந்தேதி வரை நடைபெற்றன. இந்த ஆண்டில், ஆன்-ஸ்கிரீன் மார்கிங் எனப்படும் டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.

இதனால், விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, ஒட்டுமொத்த அளவில் 85.20 சதவீதம் அளவுக்கு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 3.9 சதவீதம் குறைவாகும்.

மொத்தம் 18 லட்சத்து 57 ஆயிரத்து 517 மாணவ மாணவிகள் எழுதிய தேர்வில், வழக்கம்போல் மாணவிகள் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளனர். அவர்கள் 88.86 சதவீதமும், மாணவர்கள் 82.13 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலின மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த முறை 95 சதவீதம் மற்றும் அதற்கு கூடுதலாக மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை 17,113 பேர் (0.97 சதவீதம்). 90 சதவீதம் மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை 94,023 பேர் (5.32 சதவீதம்) என்ற அளவில் உள்ளது.

இந்த தேர்வில், மண்டல அளவில் பார்க்கும்போது, திருவனந்தபுரம் 95.62 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை (93.84 சதவீதம்) 2-ம் இடமும், பெங்களூரு 93.19 (சதவீதம்) 3-ம் இடமும் பிடித்துள்ளன.

நாட்டின் தலைநகர் டெல்லியில், டெல்லி மேற்கு 92.34 சதவீதம் தேர்ச்சி விகிதமும், டெல்லி கிழக்கு 91.73 சதவீதம் தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ளன. இதுதவிர கேந்திரிய வித்யாலயா கல்வி மையங்கள் 98.55 சதவீதம், ஜவஹர் நவோதயா வித்யாலயா கல்வி மையங்கள் 98.47 சதவீதம் தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ளன.

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் cbse.gov.in மற்றும் cbseresults.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. மாணவ மாணவிகள் அதில் சென்று தங்களுடைய பிறந்த தேதி, பதிவெண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி, மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com