சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுடன் பிரதமர் மோடி திடீர் கலந்துரையாடல்

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுடனான சந்திப்பில் இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திரம் பற்றி கட்டுரை ஒன்றை எழுதும்படி பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுடன் பிரதமர் மோடி திடீர் கலந்துரையாடல்
Published on

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிளஸ்-2 தேர்வு ஜூலை 1ந்தேதி முதல் 16ந்தேதி வரை 2 பகுதிகளாக நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கிடையில், மாணவர்களின் நலனை முன்னிட்டு, இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின்பு பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து குஜராத், மத்தியபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்து முதல்-மந்திரிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் பொதுத்தேர்வு நிலைப்பாடு குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று கலந்துரையாடினார். திடீரென நடந்த இந்த சந்திப்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆச்சரியமடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில், இமாசல பிரதேசத்தின் சோலன் நகரில் இருந்து பேசிய மாணவர் ஒருவர், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு வாரிய தேர்வுகள் ரத்து என்பது ஒரு நல்ல முடிவு என கூறினார்.

பிரதமர் மோடி பேசும்பொழுது, 12ம் வகுப்பு மாணவர்கள் வருங்காலம் பற்றி எப்போதும் சிந்தித்து வருகிறார்கள். ஜூன் 1ந்தேதி வரை நீங்கள் அனைவரும் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருந்திருப்பீர்கள் என்றார்.

இதற்கு ஒரு மாணவர், தேர்வுகளை திருவிழா போன்று கொண்டாட வேண்டும் என நீங்கள் கூறியுள்ளீர்கள். அதனால் தேர்வு பற்றிய அச்சம் என் மனதில் இல்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழுவாக ஒன்றிணைந்து செயல்படுவது பற்றி நீங்கள் கற்பிக்கப்பட்டு இருப்பீர்கள். அதுபோல் கொரோனா 2வது அலையில் குழுவாக இணைந்து பொதுமக்கள் செயலாற்றிய மற்றும் பங்கு பெற்ற விசயங்களை நாம் காண முடிந்தது.

ஒவ்வொரு இந்தியரும் பெருந்தொற்றில் இருந்து வெளியே வந்து வெற்றி பெறுவோம் என கூறி வருகிறார். நீங்கள் அனைவரும் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என கூறினார்.

இந்த சந்திப்பில், மாணவர்களின் பொழுதுபோக்கு மற்றும் அன்றாட பணிகள் ஆகியவை பற்றியும் பிரதமர் மோடி கேட்டு கொண்டார். , இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திரம் பற்றி கட்டுரை ஒன்றை எழுதும்படியும் மாணவ, மாணவியரை கேட்டு கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com