கர்நாடக பா.ஜனதா தலைவராக சி.டி.ரவி நியமனம்?

கர்நாடக பா.ஜனதா தலைவராக சி.டி.ரவி நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 2023-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் சுமார் 15 மாதங்கள் மட்டுமே உள்ளன. ஏற்கனவே முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா நீக்கப்பட்டு, அதே லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மைக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவராக உள்ள நளின்குமார் கட்டீலை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக உள்ள சி.டி.ரவிக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சி.டி.ரவி ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர் ஆவார். அதனால் அவருக்கு கட்சியின் மாநில தலைவர் பதவியை வழங்கினால் அந்த சமூக மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது. முதல்-மந்திரி பதவி லிங்காயத் சமூகத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதால் அந்த மக்களின் வாக்குகளும் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று கருதுகிறார்கள்.

இதன் மூலம் கர்நாடகத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று பா.ஜனதா மேலிடம் கணக்கு போட்டுள்ளது. அதனால் கர்நாடக பா.ஜனதா தலைவர் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நளின்குமார் கட்டீலுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நளின்குமார் கட்டீல் மாநில தலைவராக மக்களிடம் செல்வாக்கு பெறவில்லை என்றும், கடலோர மாவட்டங்களில் தான் அதிகமாக தென்படுகிறார் என்றும், அவர் மாநிலம் முழுவதும் கட்சியை கட்டமைக்க உரிய முயற்சி செய்யவில்லை என்றும் பேசப்படுகிறது. அதனால் தான் அவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com