இந்தியா முழுவதும் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு

2021-ம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய கணக்கெடுப்பு பணி கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு
Published on: 

புதுடெல்லி,

இந்தியாவில் முதல் நேரடி மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881-ல் நடைபெற்றது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

கடைசியாக 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்தது. அதில் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. ஆண்கள் 62.32 கோடி பேர், பெண்கள் 58.27 கோடி பேர் இருந்தனர். நாட்டில் 24.95 கோடி குடும்பங்கள் இருந்தன. அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய கணக்கெடுப்பு பணி கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்நிலையில், இந்தியா முழுவதும் 2027-ம் ஆண்டு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று இந்திய பதிவாளர் ஜெனரல்(RGI) மற்றும் கணக்கெடுப்பு ஆணையரான மிருதுஞ்சய் குமார் நாராயண் அறிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பிற்கான குறிப்புத் தேதி மார்ச் 1 நள்ளிரவு 12 மணியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் பனிப்பொழிவு உள்ள பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன்படி மணிப்பூர் (மறு அறிவிப்பு வரும் வரை), கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், லடாக் மற்றும் இமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீரின் பனிப்பொழிவு உள்ள பகுதிகள் ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான மறுஆய்வுச் சுற்று 2027 மார்ச் 1 முதல் மார்ச் 5 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்குவதற்குச் சற்று முன்பு, அதாவது 2027 ஜனவரி 10 முதல் ஜனவரி 24 வரை, சுய கணக்கெடுப்பிற்கான ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடத்தப்பட உள்ள 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக ரூ.11,718 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X