

சென்டாக் விண்ணப்பம்
புதுவையில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்க சென்டாக் மூலம் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.இதை கல்வித்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். அப்போது சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான கையேட்டை நமச்சிவாயம் வெளியிட்டார். அப்போது கல்வித்துறை செயலாளர் வல்லவன், இயக்குனர் ருத்ரகவுடு, சென்டாக் அதிகாரி சிவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு அல்லாத படிப்புகள்
2021-22 ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளான பி.டெக், பி.எஸ்சி., பி.பி.எஸ்.சி., பி.எஸ்சி. (நர்சிங்), பி.பி.டி, பி.எஸ்சி. (எம்.எல்.டி.), பி.பார்ம், பி.ஏ., எல்.எல்.பி., இளநிலை கலை அறிவியல் மற்றும் வணிக படிப்புகளான பி.ஏ., பி.எஸ்சி., பி.காம், பி.பி.ஏ., பி.சி.ஏ., மற்றும் இளநிலை நுண்கலை படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம்.புதுச்சேரி மற்றும் பிற மாநிலத்தவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகுதியின் அடிப்படையில் நீட் தேர்வு அல்லாத இளநிலை தொழில்முறை கலை மற்றும் அறிவியல் மற்றும் வணிகம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
8 ஆயிரம் இடங்கள்
கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் 4 ஆயிரத்து 260 இடங்கள், தொழில்முறை கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 907 இடங்கள் என ஒட்டுமொத்தமாக 8 ஆயிரத்து 167 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு சென்டாக் விண்ணப்பங்களுக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவசமாகவே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.புதுவையில் தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக 15-ந்தேதிக்கு பிறகு கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆலோசித்து உரிய முடிவு எடுப்போம். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தினால் ரூ.40 கோடி கூடுதல் செலவாகும். இது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.