கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி டன்னுக்கு ரூ.55 நேரடியாக வழங்கப்படும்

கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி டன்னுக்கு ரூ.55 நேரடியாக வழங்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி டன்னுக்கு ரூ.55 நேரடியாக வழங்கப்படும்
Published on

புதுடெல்லி,

நாட்டில் 2017-18 நிதி ஆண்டில் கணிக்கப்பட்ட சர்க்கரை பயன்பாட்டு அளவை விட உற்பத்தியின் அளவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை விலை சரிந்து உள்ளது. சர்க்கரை விலை சரிவால் சர்க்கரை ஆலைகள் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.9 வரை இழப்பை சந்திக்கின்றன.

ஒரு கிலோ சர்க்கரையின் உற்பத்தி செலவு ரூ.35. ஆனால் ஒரு கிலோ சர்க்கரையின் விற்பனை விலை ரூ.26.

இப்படி சர்க்கரை விலையில் ஏற்பட்டு உள்ள சரிவு காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் தர வேண்டிய பாக்கித்தொகையின் அளவு ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் சர்க்கரை ஆலைகளில் அரைக்கப்பட்ட கரும்புகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.5.50 நிதி உதவி வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.5.50 (டன்னுக்கு ரூ.55) நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி உதவி, சர்க்கரை ஆலைகள் சார்பில் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நியாயமான, லாபம் தரத்தக்க விலையாக தர வேண்டிய தொகையில் இருந்து இது சரிக்கட்டப்படும் என்று குறிப்பிட்டார்.

சர்க்கரை உற்பத்தியில் முன்னணி மாநிலமாக உள்ள கர்நாடகத்தில் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய மந்திரிசபையின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை வருமாறு:-

* வணிக ரீதியிலான விவகாரங்களில் விரைவான தீர்வு காண்பதற்கு வசதியாக வணிக கோர்ட்டு, வணிக பிரிவு, ஐகோர்ட்டுகளின் வணிக மேல்முறையீட்டு அமர்வு ஆகியவற்றை மாற்றி அமைப்பதற்கு ஏற்ப ஒரு அவசர சட்டம் இயற்றுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

* 11 விவசாய திட்டங்களை ஒரே திட்டமாக இணைத்து கொண்டு வரப்பட்டு உள்ள பசுமைப்புரட்சி- கிருஷ்ணாநதி யோஜனா திட்டத்தை ரூ.33 ஆயிரத்து 269 கோடி மதிப்பீட்டில், 2020-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை தொடர்வதற்கு மத்திய மந்திரிசபை அனுமதி அளித்தது.

* பிரதம மந்திரி ஆரோக்கிய பாதுகாப்பு திட்டத்தை 12-வது ஐந்தாண்டு திட்டத்தை தாண்டி 2019-20 வரை தொடர்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.14 ஆயிரத்து 832 கோடி ஆகும். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது இந்த திட்டத்தின்கீழ்தான் வருகிறது.

* மூத்த குடிமக்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிற பிரதம மந்திரி வயவந்தனா யோஜனா ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் முதலீடு செய்யலாம் என்பது ரூ.15 லட்சம் என்ற அளவுக்கு முதலீடு செய்யலாம் என முதலீட்டு வரம்பை இரு மடங்கு ஆக்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் மூத்த குடிமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறலாம்.

* ஐ.பி.எம். என்று அழைக்கப்படுகிற இந்திய சுரங்க பணியகத்தை மறு கட்டமைப்பு செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com