

புதுடெல்லி,
மாலத்தீவில் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. அங்கு அதிபர் யாமீன் அப்துல் கயூம் அவசர நிலையை பிரகடனம் செய்து உள்ளார். அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அதன் முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இந்த நிலையில் மாலத்தீவு நிலைமை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில், சுப்ரீம் கோர்ட்டின் முழு அமர்வு பிப்ரவரி 1ந் தேதி அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன், அவசர நிலையை அறிவித்து, மக்களின் அரசியல் சாசன உரிமைகளை நிறுத்தி வைத்து இருப்பது வருத்தம் அளிக்கிறது என கூறப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, அரசியல் தலைவர்கள் கைது ஆகி இருப்பது கவலை அளிக்கும் அம்சம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மாலத்தீவுக்கு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.