எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த தடை; மத்திய அரசு

உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக திகழ்கிறது.
எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த தடை; மத்திய அரசு
சர்க்கரை பயன்படுத்த தடை
Published on: 

புதுடெல்லி,

உள்நாட்டில் சர்க்கரை விலையை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும் எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை மற்றும் கரும்பு சாற்றை பயன்படுத்த மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பருவமழை குறைவால் வந்த சிக்கல்

உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக திகழ்கிறது. ஆனால், நடப்பாண்டில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் கரும்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டில் சர்க்கரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டது. இதனைத் தடுக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு

மத்திய அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து, அரசுக்கு சொந்தமான முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், நுமாலிகர் மற்றும் மங்களூர் பெட்ரோகெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கரும்பு சாறு மற்றும் சர்க்கரை பாகில் இருந்து எத்தனால் கொள்முதல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய கொள்கை

அதே நேரத்தில், எத்தனால் தயாரிப்பு முற்றிலும் முடங்கிவிட கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உயிரி எரிபொருள்கள் மீதான தேசிய கொள்கையின்படி, சேதமடைந்த உணவு தானியங்கள், உபரி அரிசி மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றில் இருந்து எத்தனால் தயாரித்து கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பொதுமக்களுக்கு சர்க்கரை தடையின்றி கிடைக்கவும், பண்டிகைக் காலங்களில் விலை உயர்வைத் தடுக்கவும் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு சர்க்கரை உற்பத்தி் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com