

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் மூலமாக பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கத்தை மெட்டா தீர்மானிப்பது குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியது. மேலும் மத்திய அரசின் விதிகளுக்கு இணங்கி செயல்படாத பட்சத்தில் நிறுவனத்தின் சட்டப்பாதுகாப்பை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமரின் பேஸ்புக் பதிவு தற்காலிகமாக நீக்கப்பட்டது. ஏ.ஐ. மூலம் உரு வாக்கப்பட்ட டீப்பேக் வீடியோக்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்கள் குறித்து மத்திய அரசு மெட்டா நிறுவனத்திடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளது. மெட்டாவின் உலகளாவிய விவகாரங்கள் தலைவர் ஜோயல் கேப்லன் தலைமையிலான குழுவினர், தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் செயலாளர் எஸ்.கிருஷ்ணனைச் சந்தித்து விளக்கம் அளித்தனர். பிரதமரின் பதிவு நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், டீப் பேக் மற்றும் பிற குற்றச்சாட்டுகளைச் சரிசெய்ய முயற்சிப்பதாக உறுதிய ளித்துள்ளது.
சமூக வலைதள நிறுவனமான மெட்டா, தனது தளத்தில் உள்ள பரிந்துரை முறை மற்றும் கட்டண விளம்பரங்கள் மூலம் பயனர்களுக்கு என்ன உள்ளடக்கத்தைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அந்த நிறுவனம் ஒரு இடைத்தரகராக நீடிக்க தகுதியுடையதா என்ற கேள்வியை மத்திய அரசு எழுப்பியுள்ளது. ஒரு தளம் தானாகவே உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கும்போது, அது வெளியீட்டாளரின் பொறுப்பைப் பெறுகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம், பிரிவு 79-ன் கீழ் இடைத்தரகர்களுக்கு மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கான சட்டப் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், தகுந்த சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத பட்சத்தில் இந்த விலக்கு ரத்து செய்யப்படலாம்.
மெட்டா பரிந்துரை முறைகள் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டதா என்பதை அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்திய மொழிகள் மற்றும் சமூக கலாசார நுணுக்கங்களை உணர்ந்து, உள்ளடக்கக் கட்டுப்பாட்டில் மனித கண்காணிப்பை அதிகரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.இதர சமூக வலைதளங்களிடமும் இது போன்ற விசாரணைகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. தணிக்கை செய்வது நோக்கமல்ல, இந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் இலக்கு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.