வெங்காயம் கொள்முதல் விலையை ரூ.15.80 ஆக உயர்த்தி மத்திய அரசு நிர்ணயம்

மத்திய அரசின் விலை நிலைப்படுத்தல் நிதியத்தின் கீழ் இந்த ஆண்டு 2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
வெங்காயம்
Published on

புதுடெல்லி,

அவசரக்கால இருப்பு திட்டத்தின் கீழ் வெங்காயம் கொள்முதல் விலை 24 சதவீதம் உயர்த்தப்பட்டு கிலோ ரூ.15.80 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. உணவு தானியங்களில் அவசர கால தேவைக்காகவும், சந்தை தலையீட்டு நோக்கங்களுக்காகவும், விலை நிலைப்படுத்தல் நிதியத்தின் கீழ் இடையிருப்பு கையிருப்பு என்பது ஆண்டுதோறும் பராமரிக்கப்படுகிறது. அதாவது உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு அவற்றை சேமித்து வைக்கும் திட்டம் ஆகும். இதன்படி நடப்புப் பருவத்துக்கான வெங்காயக் கொள்முதல் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கியது. இதில் கொள்முதல் விலை திருத்தப்பட்டுள்ளது.

வெங்காயம் கொள்முதல் விலை உயர்வு:

விவசாயிகளை ஊக்குவிக்கவும், சந்தை விலைகளைத் திறம்பட ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அரசு ஒரு கிலோ வெங்காயத்தின் கொள்முதல் விலையை ரூ.12.70-ல் இருந்து ரூ.15.80 ஆக 24 சதவீதம் உயர்த்தி உள்ளது. அதே நேரத்தில் வலுவான உள்ளூர் உற்பத்தியின் காரணமாக வெளிநாட்டு இறக்குமதியின் தேவை குறைந்துள்ளதால் பருப்பு வகைகளின் கையிருப்பு 43 லட்சம் டன்கள் என்ற குறிப்பிடத்தக்க அளவை எட்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 லட்சம் டன் இலக்கு:

மத்திய அரசின் விலை நிலைப்படுத்தல் நிதியத்தின் கீழ் இந்த ஆண்டு 2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த கொள்முதல் பணிகள் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை குழுமம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகிய இரு மத்திய முகமைகள் மூலம் கடந்த 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com