

புதுடெல்லி,
தொலைக்காட்சி சேனல்களுக்கான தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகள் (TRP) அறிக்கையை ‘பார்க்’(BARC) நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த 4 வாரங்களுக்கு, அல்லது மறு அறிவிப்பு வரும் வரை செய்தி சேனல்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை வெளியிடுவதை நிறுத்தி வைக்க ‘பார்க்’ நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக சில தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தேவையற்ற பரபரப்பு மற்றும் ஊகங்களை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிடுவதால், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அச்சத்திற்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொது நலனை உறுதி செய்யவும், ஒளிபரப்பு ஊடகங்கள் மூலம் பீதி பரவுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, இந்தியாவில் தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான கொள்கை வழிகாட்டுதல்களை பின்பற்றி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.