

புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த 6 ராணுவ வீரர்களின் பெயர்களை மத்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீரர்களின் பெயர்கள், நாட்டிற்காக உச்சபட்ச தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவகத்தின் இணையதளத்தில் உள்ள 'ரோல் ஆஃப் ஆனர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்தின் வால் 3டி( Wall 3D) பகுதியில் 2025-ஆம் ஆண்டுக்கான நினைவுப் பட்டியலிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
சுபேதார் மேஜர் பவன் குமார்
ரைஃபிள்மேன் சுனில் குமார் (வீர் சக்ரா)
லான்ஸ் நாயக் தினேஷ் குமார்
ஏவியேஷன் டெக்னீஷியன் மூட் முரளிநாயக்
ஹவில்தார் சுனில் குமார் சிங்
சார்ஜென்ட் சுரேந்திர குமார் (வாயு பதக்கம்)
இந்த 6 பேரின் பெயர்கள் 'ரோல் ஆஃப் ஆனர்' பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் உயிர்நீத்த வீரர்களின் அடையாளங்களை அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் வெளியிட்டிருப்பதை காட்டுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானாலும், இதுவரை அவர்களின் பெயர்களை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
கடந்த 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக மே 7-ஆம் தேதி இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது.இந்த நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லிய தாக்குதல்களை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன், ஏவுகணை மற்றும் எல்லைத் தாண்டிய தாக்குதல் முயற்சிகளையும் இந்திய பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன.
மேலும், பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளங்களான நூர் கான் விமானப்படை தளம் மற்றும் ரஹீம் யார் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களையும் இந்திய படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.