திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் - பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் - பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பல விமான நிலையங்கள் தொடர்ந்து தனியாரிடம் வழங்கப்படும் என்றும் அடுத்த 10 வருடத்தில் புதிதாக 100 விமான நிலையங்கள் நாட்டில் கட்டப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளிட்ட 12 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க இந்திய விமான நிலைய நிர்வாகம் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரைக்கு இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜித்தேந்தர் சிங் ஆகியோர் வெளியிட்டனர். இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அரசும், குறிப்பிட்ட நிர்வாகமும் இணைந்து விமான நிலையத்தை நிர்வாகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அளித்த உத்தரவாதத்தை மீறும் வகையில் மத்திய அரசின் இந்த முடிவு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், மாநில அரசு தரப்பின் வாதங்களை கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு ஒருதலைபட்சமானதாகும். கேரள மக்களுக்கு விருப்பமில்லாத இந்த முடிவை செயல்படுத்தினால், மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com