

புது டெல்லி,
வெள்ளிதோறும் நெல், அரிசி கையிருப்பு விவரத்தை கட்டாயம் வெளியிட வேண்டும் என வியாபாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு பொது வினியோகத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோ கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்களது நெல், அரிசி கையிருப்பு விவரங்களை வெளியிட வேண்டும். பாசுமதி அரிசி, புழுங்கல் அரிசி, குருணை மற்றும் நெல் ஆகியவற்றின் இருப்பு விவரங்களை மத்திய அரசின் உணவு பொருட்கள் இருப்புக்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி அரிசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அரிசியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில அரசுகள் அரிசி கையிருப்புக்கான வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.