தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசு; சித்தராமையா குற்றச்சாட்டு

தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகின்றன என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசு; சித்தராமையா குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எடியூரப்பா கூறுவாரா?

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பிரதமர் மோடியை விமர்சித்தால் அதே இடத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள் என்று ரீதியில் பேசியுள்ளார். எடியூரப்பாவிடம் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். 2014-ம் ஆண்டுக்கு முன்பு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் எவ்வளவு விவசாய கடனை தள்ளுபடி செய்தார். அம்பானி, அதானி போன்றோரின் கடன்கள் எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டன. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு யார்-யாருடைய கடன்கள் எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்து விவரங்களை எடியூரப்பா கூறுவாரா?.

காங்கிரஸ் ஆட்சியில் வரி எவ்வளவு இருந்தது, இந்த பா.ஜனதா ஆட்சியில் வரி எவ்வளவு உள்ளது என்பதை கூற முடியுமா?. பெரிய நிறுவனங்கள் மீதான வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு பெட்ரோலிய பொருட்கள் மீது எவ்வளவு வரி இருந்தது, தற்போது எவ்வளவு வரி உள்ளது என்பதை சொல்ல முடியுமா?. காங்கிரஸ் ஆட்சியில் வேலையின்மை சதவீதம், தற்போது வேலையின்மை சதவீதம் எவ்வளவு என்று கூற முடியுமா?.

மோடி அல்லவா?

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 32 சதவீதமாக இருந்தது. அது தற்போது 21 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் கடன் ரூ.53 லட்சம் கோடியில் இருந்து தற்போது ரூ.155 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டை திவாலாக்கியது மோடி அல்லவா?. கர்நாடகத்தில் இருந்து ஆண்டிற்கு ரூ.3 லட்சம் கோடி வரி மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால் மத்திய அரசு கர்நாடகத்திற்கு வெறும் ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே வழங்குகிறது. இதை நியாயம் என்று கூற வேண்டுமா?.

மத்திய அரசு நிறுவனங்கள் மூடப்படுவதால் தலித், பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன. இந்த இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு மூடுகின்றன. இது மனுவாத கொள்கையை மவுனமாக அமல்படுத்தும் முறை என்று சொல்லாமல் வேறு என்னவென்று கூற முடியும். பிரதமர் மோடியால் நாடு இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com