

பெங்களூர்
கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. பெங்களூரூவின் ராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி ஜலஹள்ளி பகுதியில் உள்ள எஸ்எல்வி பார்க் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சடிப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் ஒரு குழுவாக சென்று அங்கு சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்றிரவு 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் பிரிண்டர்கள் மற்றும் 5 லேப்டாப்களை கைப்பற்றினர்.
இது குறித்து காங்கிரசும் , பாரதீய ஜனதாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் போலி வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் குறித்து கர்நாடக முதல் மந்திரி சித்தராமைய்யா கூறியதாவது:-
போலி வாக்காளர் அடையாள அட்டை குறித்து விசாரிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அது பற்றி நான் ஒன்றும் கூற முடியாது. அரசு இயந்திரத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.
காங்கிரஸ் தொடர்ந்து பி.ஜே.பி அரசாங்கத்தின் கண்காணிப்பில் உள்ளது. 12 முறை தேர்தலில் நிற்கும் நான் இந்த சோதனைகளை முதல் முறையாக பார்க்கிறேன். என கூறி உள்ளார்.