சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம்

மீஷோ, மெட்டா, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய 4 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம்
Published on

புதுடெல்லி,

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 மற்றும் தொலைத்தொடர்பு சட்டங்களை மீறி, அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக, மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), எட்டு நிறுவனங்களுக்கு எதிராக இறுதி உத்தரவுகளை பிறப்பித்து, மொத்தம் ரூ.44 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

முன்னதாக இது குறித்து ஜியோமார்ட், சிமியா, டாக் ப்ரோ, மீஷோ, மாஸ்க்மேன் டாய்ஸ், டிரேட்இந்தியா, அன்ட்ரிக்ஷ் டெக்னாலஜிஸ், வர்தான்மார்ட், இந்தியாமார்ட், மெட்டா(பேஸ்புக்), பிளிப்கார்ட், கிருஷ்ணா மார்ட் மற்றும் அமேசான் ஆகிய 13 ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த தளங்களில் 16,970-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத பொருட்களின் பட்டியல்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காக மீஷோ, மெட்டா, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய 4 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிமியா, ஜியோமார்ட், டாக் ப்ரோ மற்றும் மாஸ்க்மேன் டாய்ஸ் ஆகிய 4 நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார செயலாளர் நிதி காரே தெரிவித்துள்ளார்.

இதில் மீஷோ, மெட்டா, சிமியா, ஜியோமார்ட் மற்றும் டாக் ப்ரோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் அபராதங்களைச் செலுத்திவிட்டதாகவும், மற்ற நிறுவனங்கள் இன்னும் அபராதத்தை செலுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆன்லைன் வணிகத் தளங்களில் வாக்கி-டாக்கி உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை சட்டவிரோதமாக பட்டியலிடுதல் மற்றும் விற்பனை செய்வதை தடுப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்குமான வழிகாட்டுதல்களை கடந்த ஆண்டு CCPA வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com