

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா தொற்று கிடுகிடுவென கூடிவரும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள், அது சார்ந்த உபகரணங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆக்சிஜன், அது சார்ந்த உபகரணங்களை ஏற்றி வரும் கப்பல்களுக்கான அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யும்படி நாட்டின் முக்கிய துறைமுகங்களுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து, துறைமுக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவம் சார்ந்த உபகரணங்களை கொண்டுவரும் கப்பல்களுக்கு துறைமுகத்தில் முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கும்படியும் துறைமுக பொறுப்பு கழகங்களுக்கு துறைமுக அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆக்சிஜன், அது சார்ந்த உபகரணங்களை கப்பலில் இருந்து தாமதமின்றி இறக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். துறைமுகத்தில் இருந்து அவற்றை விரைவாக வெளியே அனுப்புவதற்கு சுங்கத்துறையினர் உள்ளிட்டோருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று துறைமுக பொறுப்பு கழக தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற சரக்குகளுடன் ஆக்சிஜனையும் ஏற்றிவரும் கப்பல்களுக்கு அதன் தகவுக்கு ஏற்ப கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும், ஆக்சிஜன் ஏற்றிவரும் கப்பல்கள், அவை துறைமுகத்தில் செலவிட நேர்ந்த குறித்து கண்காணிக்கப்படும் என்றும் கப்பல் போக்குவரத்து, துறைமுக அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆக்சிஜன் கப்பல்களுக்கான கட்டணத் தள்ளுபடி உத்தரவு, அடுத்த 3 மாதங்களுக்கு அல்லது மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.