கொரோனா வைரஸ் பாதிப்பை கண்காணிக்க மத்திய மந்திரிகள் குழு; நாடாளுமன்றத்தில் சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் அறிக்கை

கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏற்பட்டுள்ள நிலைமையை மத்திய மந்திரிகள் குழு கண்காணித்து வருகிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் அறிக்கை அளித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை கண்காணிக்க மத்திய மந்திரிகள் குழு; நாடாளுமன்றத்தில் சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் அறிக்கை
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் அறிக்கை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டில் மார்ச் 4-ந் தேதி (நேற்று முன்தினம்) நிலவரப்படி 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

இதில், கேரளாவில் 3 பேர் இந்த வைரஸ் பாதித்து, சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டனர். கடந்த 3 நாட்களில் இத்தாலி சென்று வந்த நிலையில் டெல்லியில் ஒருவருக்கும், துபாய் சென்று வந்து, சிங்கப்பூர்வாசியுடன் தொடர்பு கொண்ட ஒருவருக்கு தெலுங்கானாவிலும் கொரோனா பாதித்துள்ளது. அவர்கள் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.

ராஜஸ்தானில் இத்தாலிய சுற்றுலாப்பயணிக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த குழுவில் சுற்றுலா வந்த இத்தாலியை சேர்ந்த 14 பேருக்கும், அவர்களது இந்திய பஸ் டிரைவருக்கும் டெல்லி வந்த நிலையில் கொரோனா தாக்கி இருப்பது உறுதியாகி உள்ளது.

இத்தாலி சென்று டெல்லி வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.

கொரோனா வைரசை தடுப்பதற்கான தயார் நிலையை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார், இந்த நோயை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. நிலைமையை தினமும் நான் ஆய்வு செய்கிறேன்.

மேலும் நிலைமையை கண்காணிப்பதற்கு எனது தலைமையில் வெளியுறவு மந்திரி, சிவில் விமான போக்குவரத்து மந்திரி மற்றும் உள்துறை, கப்பல், சுகாதாரத்துறை ஆகியவற்றின் ராஜாங்க மந்திரிகளை கொண்டு மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 3-ந் தேதி அமைக்கப்பட்டதில் இருந்து இந்த குழு 4 முறை கூடி ஆய்வு நடத்தி உள்ளது.

மத்திய மந்திரிசபை செயலாளர், தொடர்புடைய அனைத்து துறை அமைச்சகங்கள், மாநில தலைமைச் செயலாளர்களுடன் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்.

எனது அமைச்சகமும் தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறது. மாநிலங்களுடன் ஒவ்வொரு நாளும் வீடியோ கான்பரன்ஸ் வழியாக ஆய்வுகள் நடக்கிறது.

இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான், சீனா, ஜப்பான் நாட்டினருக்கு விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதலில் 18-ந் தேதியில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தொடங்கப்பட்டது. அதன்பின்னர் விரிவுபடுத்தப்பட்டு 21 விமான நிலையங்களில் தற்போது பரிசோதனை நடக்கிறது.

சீனா, தென்கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங்காங், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, நேபாளம், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து நேரடி விமானங்களில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று முதல் (நேற்று முன்தினம் முதல்) நாட்டினுள் வரும் அனைத்து சர்வதேச நாடுகளில் இருந்து வருகிற பயணிகளுக்கும் பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12 பெரிய துறைமுகங்கள் மற்றும் 65 சிறிய துறைமுகங்களிலும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படுகிறது.

கெரோனா வைரஸ் அபாயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தகவல் திரட்டு தயாரிக்கப்பட்டு, மாநிலங்கள் மூலமாக பிராந்திய மொழிகளிலும் பரப்பப்படுகிறது. வானொலி, தொலைக்காட்சிகளில் நிபுணர்களை கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் தினந்தோறும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துகிறது. சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தகவல்கள் பகிரப்படுகிறது. கட்டுப்பாட்டு அறை அமைத்து, 24 மணி நேரமும் இயங்குகிறது. அதன் தொலைபேசி எண். 011-239780

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மாவட்ட அளவில் கலெக்டர்களை தொடர்பு அதிகாரிகளாக நியமித்துள்ளோம்.

மொத்தத்தில் இந்த வைரசை கட்டுப்படுத்த அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com