காஷ்மீர்: அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனத்தகவல்

காஷ்மீரீல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
காஷ்மீர்: அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனத்தகவல்
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையொட்டி கடந்த 5-ந்தேதி முதல் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள், ஜம்மு பிராந்தியத்தில் பெரும்பாலும் விலக்கி கொள்ளப்பட்டன. அங்கு ரத்து செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புகளை மீண்டும் வழங்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

ஆனால் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. அங்கு செல்போன், இணையதள சேவைகள் தொடர்ந்து முடங்கி கிடக்கும் நிலையில், பல இடங்களில் வாகன இயக்கமும், பொதுமக்களின் நடமாட்டமும் கூட குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.

ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகத்துக்கு உதவிகள் செய்வதற்கு பல்வேறு மத்திய குழுக்கள் கடந்த 5-ஆம் தேதி முதல் மாநிலத்துக்கு சென்றன. இதேபோல், மேலும் பல மத்தியக் குழுக்கள் ஜம்மு-காஷ்மீருக்கு செல்லவுள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுமட்டுமன்றி, ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்வதற்கு, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக வரும் நாள்களில் அந்த மாநிலத்துக்கு செல்வார்கள். ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அவை செயல்படுத்தப்படும் விதத்தை பார்வையிடும் பொறுப்பு மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com