

லக்னோ,
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் கட்டமைப்பு உருகுலைந்து காணப்படுகிறது. மத்திய அரசு கூடுதல் நிதியுதவியை வழங்க வேண்டும் என்று கேரளா வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் கூடுதல் உதவிகளை வழங்குவோம் என கூறியுள்ளது. இதற்கிடையே கேரளா ரூ. 3 ஆயிரம் கோடியை உலக வங்கியிடம் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இப்போது நிதியுதவி செய்வதில் தாமதம் காட்டும் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ள மாயாவதி, கேரளாவை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என கூறியுள்ளார்.
பா.ஜனதா ஆட்சி செய்யாத கேரளாவை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதற்கு மத்திய அரசுக்கு பகுஜன் சமாஜ் கண்டனம் தெரிவிக்கிறது. வெள்ளத்தினால் மோசமான பாதிப்பை கேரளா எதிர்க்கொண்டுள்ளது. தேசிய பேரிடராக இதனை அறிவிக்க வேண்டும். கேரளா, கர்நாடகாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான உதவிகளை தனிநபர்களும், அமைப்புகளும் வழங்கி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு மட்டும் இவ்விவகாரத்தில் தேவையான தீவிரத்தை காட்டவில்லை என விமர்சனம் செய்துள்ளது பகுஜன் சமாஜ்.
கேரளாவிற்கு தேவையான உதவிகளை பகுஜன் சமாஜ் கட்சியினர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் மாயாவதி.