

கொல்கத்தா,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு நிறுவன நாளையொட்டி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று காணொலி காட்சி வழியாக பேசினார்.
அப்போது அவர் மத்திய அரசை சாடினார். அவர், மத்திய அரசால் நம்மோடு அரசியலில் போட்டி போட முடியவில்லை. எனவே அவர்கள் விசாரணை அமைப்புகளை நமக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். நமது முன்னுரிமை, அனைத்து தரப்பு மக்களுக்காக உழைப்பதுதான். இதைத்தான் கடந்த 10 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம் என கூறினார்.
மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ரூஜிராவையும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ள தருணத்தில் மம்தா பானர்ஜி, மத்திய அரசை சாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.