இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய மந்திரி கிஷண் ரெட்டி

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண் ரெட்டி உறுதிபட தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய மந்திரி கிஷண் ரெட்டி
Published on

கோல்ப் போட்டிகள்

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கோல்கொண்டா மாஸ்டர்ஸ் தெலுங்கானா ஓபன் கோல்ப் போட்டிகள் நடந்தது. நேற்று நடந்த இதன் பரிசளிப்பு விழாவில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண் ரெட்டி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

69 கோடி பேருக்கு தடுப்பூசி

பிரதமர் மோடி தலைமையின் கீழ் மத்திய அரசு உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது வரை 69 கோடி பேர் இலவசமாக தடுப்பூசி போட்டுள்ளனர்.

வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நாட்டின் கடைக்கோடியில் உள்ள கடைசி குடிமகன் வரை தடுப்பூசியை கொண்டு சேர்க்க நாங்கள் விரும்புகிறோம். அந்தவகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பெருமைக்குரிய விஷயம்

அமெரிக்காவை தவிர, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த குறிப்பிட்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயம். இது உலக அளவில் இந்தியாவையும், நமது விஞ்ஞானிகளையும் உயர்த்தி உள்ளது.நமது தடுப்பூசிகளை வாங்குவதற்கு 153 நாடுகள் விருப்பம் தெரிவித்து உள்ளன. அதில் சில நாடுகள் முன்பணமும் செலுத்தி இருக்கின்றன. எனினும் உள்நாட்டு தேவை முடிந்த பிறகே ஏற்றுமதி என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.

சுற்றுலா கொள்கை

நாங்கள் சுற்றுலாவை ஊக்குவிப்போம். இதற்காக சிறப்பு கொள்கை உருவாக்கும் பணிகள் தொடங்கி விட்டன. கோல்ப் சுற்றுலாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். இது நிறைய கோல்ப் வீரர்களையும், ஆர்வலர்களையும் ஈர்க்கும். நம் நாட்டு வானிலை ஆண்டு முழுவதும் இனிமையானது. இங்குள்ள மக்கள் நட்பாக இருக்கிறார்கள். இதுபோன்ற பல வசதிகள் நம்மிடம் உள்ளன.

சுற்றுலாத்துறை கடந்த 2 ஆண்டுகளில் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா ஏஜென்டுகள், சுற்றுலா நடத்துனர்கள், பணியாளர்கள் என சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து உள்ளனர்.

நிதியுதவி வழங்கப்படும்

எனவே இவர்களுக்கு நிதியுதவி வழங்க திட்டமிட்டு உள்ளோம். அதன்படி சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சுற்றுலாத்துறை மூலம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதைப்போல சுற்றுலா நடத்துவோருக்கு ரூ.10 லட்சமும் அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை வருகிற 15-ந்தேதி முதல் பெறுவோம்.

இவ்வாறு கிஷண் ரெட்டி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com