அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த 50 லட்சம் டன் விற்பனை: பதுக்கலை தடுக்க தீவிர கண்காணிப்பு

அரிசியை பதுக்கி வைத்து, பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த 50 லட்சம் டன் விற்பனை: பதுக்கலை தடுக்க தீவிர கண்காணிப்பு
Published on: 

புதுடெல்லி,

அரிசி விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக கையிருப்பில் உள்ள 50 லட்சம் டன் அரிசியை விற்பனை செய்ய உள்ளது. மேலும் தமிழகத்தில் பதுக்கலை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் அரிசி விலை

நாடு முழுவதும் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட விலை அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி தமிழகத்தில் ஒரு கிலோ அரிசியின் சராசரி விலை ரூ.59 ஆக இருந்தது.

கடந்த 9- தேதி அது ரூ.69 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 3 மாதங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.10 விலை அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.53 ஆகவும், மேற்கு வங்காளத்தில் ரூ.43-ல் இருந்து ரூ.52 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. டெல்லியில் கிலோ ரூ.45 என்ற அளவில் உள்ளது.

உற்பத்தி குறைந்தது

தென் மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைந்திருப்பது விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களில் மழை குறைவு மற்றும் வறட்சி காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரும் அரிசியின் அளவு குறைந்துள்ளது. அதே நேரத்தில் தேவையும் அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது.

மத்திய அரசு

அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும், விலையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அரசு கையிருப்பில் உள்ள அரிசியை கூடுதலாக சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே 25 லட்சம் டன் அரிசி தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 25 லட்சம் டன் அரிசியை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மொத்தம் 50 லட்சம் டன் அரிசி திறந்த சந்தைக்கு வரும். அதிக அளவில் அரிசி வந்தால், தட்டுப்பாடு குறைந்து விலையும் கட்டுக்குள் வரும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அரிசியை அதிக அளவில் வாங்கி பதுக்கி வைத்து, பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்காணிப்பு தீவிரம்

அதன்படி, அரிசி வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய கடைகள் மற்றும் அரிசி ஆலைகள் தங்களிடம் உள்ள அரிசி, நெல் இருப்பு விவரங்களை அரசிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் சந்தையில் எவ்வளவு அரிசி இருக்கிறது என்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தேவையான இடங்களில் இருப்பு வரம்பு விதிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அரிசியை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதை தடுக்க உதவும்.

X