

புதுடெல்லி,
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு வழங்கப்படும் விஐபிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 350 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை பாஜக அரசு பதவியேற்ற போது 475 ஆக உயர்ந்தது. இந்த விஐபிகளின் பாதுகாப்புக்காக பெரும் தொகை செலவிடப்படுகிறது. இசட் பிளஸ், ஒய் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ், தலைவர்களுக்கான அச்சுறுத்தலுக்கு ஏற்றார்போல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், விஐபிகளின் பாதுகாப்பை கணிசமாக குறைக்க மத்திய உள்துறை அமைச்சம் திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் விஐபி கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு அம்சமாக இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது. சில தலைவர்கள், என்.எஸ்.ஜி மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு என இரண்டையும் பெறுகிறார்கள். எனவே, சில தலைவர்களுக்கான என்.எஸ்ஜி பாதுகாப்பை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் மேலும் கூறுகையில், பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், சட்டீஷ்கர் முதல் மந்திரி ரமன் சிங், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடக்கிறது என்றனர். மேலும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ், மாதா அமிர்தானந்தமயி ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பும், ராமஜென்மபூமி சேர்மன் கோபால் தாஸ், சாக்ஷி மகராஜ் ஆகியோருக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் உட்பட 15 அரசியல்வாதிகளுக்கு என்எஸ்ஜி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அதே போல், பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூவுக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பும், காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லாவுக்கும் இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பும், அவரது மனைவி நீட்டா அம்பானிக்கு ஓய் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு 30 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். ஒய் பிரிவு பாதுகாப்பு பெறுபவர்களுக்கு 11 வீரர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர்.