நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தேர்வு மையத்தில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்வு வினாத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும், ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணை செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், மாணவர்கள் நலனை பாதுகாக்கவும் உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் நீட் முறைகேடு விவகாரத்தில் தனிநபரோ அல்லது அமைப்போ யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com