

புதுடெல்லி,
ஒவ்வொரு நிதியாண்டிலும் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும் கூட்டு மானியத்தின் முதல் தவணை ஜூன் மாதத்தில்தான் வழங்கப்படும். ஆனால் கொரோனாவின் 2-வது அலையை எதிர்கொள்வதற்கு உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது.
எனவே 2021-22-ம் நிதியாண்டுக்கான கூட்டு மானியத்தின் முதல் தவணையாக ரூ.8,923.8 கோடியை முன்கூட்டியே மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த தொகையை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று முன்தினம் விடுவித்து உள்ளது. 25 மாநிலங்களின் ஊரக உள்ளாட்சிகளுக்கு அதாவது கிராம பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொரோனாவை எதிர்கொள்வதற்காக பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஊரக உள்ளாட்சிகள் பயன்படுத்த முடியும்.
மேலும், நிபந்தனையற்ற நிதியை வழங்குவதற்கு 15ஆவது நிதி ஆணையம் விதித்திருந்த ஒரு சில நிபந்தனைகளும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு முதல் தவணையை வழங்குவதில் தளர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.