ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்கள் சார்பில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்குகிறது

ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்களுக்காக மத்திய அரசே ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது.
ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்கள் சார்பில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்குகிறது
Published on

புதுடெல்லி,

பொருளாதார மந்தநிலை காரணமாக, கடந்த நிதி ஆண்டில் இருந்தே மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் வீழ்ச்சி அடைய தொடங்கியது. மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க சொகுசு பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்படும் உபரிவரி மூலம் கிடைக்கும் வருவாயை மத்திய அரசு பயன்படுத்துகிறது.

ஆனால், அந்த வருவாயும் குறைந்து விட்டது. அதனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம்வரை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டு நிலுவைத்தொகை ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக உள்ளது.

இந்த இழப்பீட்டு நிலுவையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி மூலமோ அல்லது வெளிச்சந்தையில் இருந்தோ கடன் வாங்கிக்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு 2 விருப்ப தேர்வுகளை மத்திய அரசு முன்வைத்தது. அதில், வெளிச்சந்தை கடன் விருப்ப தேர்வை 21 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன.

அந்த மாநிலங்கள், வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக ரூ.68 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக மாநிலங்கள் சார்பில் மத்திய அரசே கடன் வாங்குகிறது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்து மாநிலங்களும், தற்போதைய கடன் வரம்புக்கு மேல் கூடுதலாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்க யோசனை தெரிவித்தோம்.

இந்த தொகையை மாநிலங்கள் சார்பில் மத்திய அரசே வெளிச்சந்தையில் கடன் வாங்கும். பின்னர், ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கு பதிலாக, மாநிலங்களுக்கு அந்த பணம் கடனாக வழங்கப்படும்.

மாநிலங்கள் தனித்தனியாக கடன் வாங்கினால், வட்டி விகிதம் வெவ்வேறு விதமாக இருக்கும். மத்திய அரசு வாங்கினால், வட்டி விகிதம் ஒற்றை இலக்கத்தில் இருக்கும். அது நிர்வகிக்க எளிதாக இருக்கும்.

இந்த கடன், மத்திய அரசின் நிதி பற்றாக்குறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com