

புதுடெல்லி,
பெருத்த மழை, வெள்ளத்தால் உருக்குலைந்து போன கேரள மாநிலத்தை சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.வெளிநாடுகளும் நிதி உதவி வழங்க முன் வந்து உள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்து உள்ளது. கத்தார் நாடு ரூ.35 கோடி நிதி உதவி தர முன் வந்து இருக்கிறது.
ஆனால் மத்திய அரசு இந்த நிதி உதவிகளை ஏற்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகின. வெளிநாட்டு நிதி உதவியை மத்திய அரசு ஏற்க மறுப்பதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணமாக 1 லட்சத்து 90 ஆயிரம் ஈரோவை (சுமார் ரூ.1 கோடியே 53 லட்சம்) இந்திய செஞ்சிலுவை சங்கத்திடம் வழங்கப்போவதாக ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கேரளாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் என்று அறிவித்தது.
இந்த நிலையில், கேரளத்துக்கு வெள்ள நிவாரணமாக மத்திய அரசு அளித்துள்ள ரூ.600 கோடி முதல்கட்ட நிதியுதவிதான், மேலும் நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பிரதமர் நரேந்திர மோடி வெள்ளச் சேதத்தை ஆய்வு செய்த பிறகு அறிவித்த ரூ.500 கோடி நிவாரணமும், அதற்கு முன்பு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த ரூ.100 கோடியும் கேரள அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டது. இது முதல்கட்ட நிவாரண உதவிதான். அடுத்தகட்டமாக மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு, கேரளத்துக்குச் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இருக்கிறது. அதன் அடிப்படையில் கேரளத்துக்கு மீண்டும் தேவைப்படும் அளவுக்கு நிதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.