ஏழை சிறைக்கைதிகளுக்கு நிதியுதவி - மத்திய அரசு புதிய திட்டத்தை தொடங்குகிறது

அபராதம், ஜாமீன் தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் ஏழை கைதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்குகிறது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

சிறைகளில் வாடும் ஏழைக்கைதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த புதிய திட்டத்தை தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, திட்டத்துக்கான விரிவான வரையறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இலவச சட்ட உதவி

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குற்றவியல் நீதிமுறையில் சிறைகள் முக்கிய அங்கமாக உள்ளன. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறைகள் தொடர்பாக அவ்வப்போது வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. சிறைகளில் பாதுகாப்பு கட்டமைப்புகளை தரம் உயர்த்த நிதியுதவி வழங்கி வருகிறது.

சிறைகளில் விசாரணை கைதிகளின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்டப்பணிகள் ஆணையம் மூலம் அவர்களுக்கு இலவச சட்ட உதவி அளிக்கப்படுகிறது.

சிறையில் இருந்து வெளியில் வரலாம்

அதைத்தொடர்ந்து, ஏழை கைதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஏழை கைதிகளில் பெரும்பாலானோர், சமூகரீதியாக பின்தங்கியவர்கள். குறைவான படிப்பும், வருமானமும் கொண்டவர்கள்.

அவர்கள் அபராதமோ, ஜாமீன் தொகையோ செலுத்த முடியாமல் சிறையில் வாடி வருகிறார்கள். அத்தகைய ஏழை கைதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும். அதன்மூலம் அவர்கள் சிறையில் இருந்து வெளிவர முடியும். சிறையிலும் நெரிசல் குறையும். தகுதியான ஏழை கைதிகளுக்கு பலன்கள் சென்றடைவதற்காக தொழில்நுட்ப வழிமுறைகள் பயன்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com