பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவு: சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் பரவல்களுக்கு மத்தியில் 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவு: சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தகவல்
Published on

12-ம் வகுப்பு தேர்வு

கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 11-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டனர். ஆனால் 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் வக்கீல் மம்தா சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்லைனில் அல்லது நேரடியாக தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுத செய்வதும் கடினமானது. 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்வது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். ஆதலால், 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், சி.பி.எஸ்.இ., வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார். அப்போது வேணுகோபால் நீதிபதிகளிடம் கூறுகையில், 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க மத்திய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது. உரிய இறுதி முடிவுகளை எடுத்து வருகிற 3-ந் தேதி தெரிவிக்கிறோம் என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில், எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் கோரிக்கையின்படி 3-ந் தேதி விசாரணையை தள்ளிவைக்கிறோம். கடந்த ஆண்டு எடுத்த கொள்கையில் இருந்து நீங்கள் விலகினாலும் அதற்குரிய சரியான காரணத்தை கூற வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அதற்குரிய துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசித்து, அனைத்து அம்சங்களையும் 3-ந் தேதி தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com