சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அடர் பூனாவாலா தனது நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
Published on

புனே,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக நாடு முழுவதும் 3,006 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தனர். கொரோனா தடுப்பூசி போடுவதில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் தடுப்பூசி குறித்த அச்சத்தை மக்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்று தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளையும், தவறான பிரசாரங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில, கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா, தனது நிறுவத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை இன்று தனது உடலில் செலுத்திக்கொண்டார். இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி பெற இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சியில் தனது நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அவர், அதன் பாதுகாப்பையும், நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்த, தான் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com