

புதுடெல்லி
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 72- வது நாளாக விவசாயிகள் மிகுந்த உறுதியுடன் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக காஜிப்பூர் எல்லையில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் டிராக்டர் டிராலிகளிலும், தார்ப்பாய் கூடாரங்களிலும் இரவில் தூங்குகின்றனர். ஒருசிலர் வெறும் சாலைகளில் படுக்கையை விரித்து தூங்குகின்றனர்.
டெல்லியின் சிங்கு எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கத்தினர் நாளை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாடு தழுவிய சக்கா ஜாம் எனப்படும் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் எல்லைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் துறையினர் மட்டுமின்றி துணை ராணுவப் படை வீரர்கள், சிறப்பு அதிரடி படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி, உத்தரப்பிரதேசம் எல்லையான காசிப்பூரில் எண் 24 தேசிய நெடுஞ்சாலையை மறித்து பாலத்திற்கு மேலேயும், கீழேயும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, வேலிகளின் மேல்புறம் முள்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்கமுடியாத வகையில் சாலைகளில் கூர்மையான ஆணிகளும் அடிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் சிங்கு, அரியானா திக்ரி எல்லைகளில் தடுப்பு வேலிகள், சிமெண்டால் ஆன தடுப்புகள், சாலைகளில் பள்ளம், சில இடங்களில் ஆணிகளும் அடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ளூர்
மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருவதால், கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளன. திக்ரியில் மெட்ரோ நிலையம் பகுதியில் பாலத்திற்கு கீழே போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டு, சாலையின் நடுவே கூர்மையான ஆணிகள் மற்றும் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது முதலில் இந்த பகுதியில்தான் விவசாயிகள் தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து டெல்லிக்குள் நுழைய முயன்றனர். மூன்று எல்லைகளும் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் அறிவிப்பை ஏற்று, நாடு முழுவதும் விவசாயிகள் நாளை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மாநிலம் முழுவதும் பேராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.