

சண்டிகார்,
பஞ்சாப், அரியானா ஆகிய 2 மாநிலங்களுக்கும் தலைநகராக சண்டிகார் திகழ்ந்து வருகிறது. ஒரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கிறது. மத்திய அரசின் ஆட்சிப்பணி விதிமுறைகள், சண்டிகார் யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சண்டிகாரை முழுமையாக பஞ்சாப் மாநிலத்துடன் சேர்க்கக்கோரி பஞ்சாப் சட்டசபையில் கடந்த 1-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கண்டனம் தெரிவித்தார். அரியானா மக்களிடம் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தநிலையில், பஞ்சாப் தீர்மானத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரியானா மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அரியானா மந்திரிசபை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
சட்டசபையில், பஞ்சாப் சட்டசபை தீர்மானத்துக்கு போட்டியாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.