தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தால் ஆத்திரம்: தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி படுகொலை


தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தால் ஆத்திரம்: தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி படுகொலை
x
தினத்தந்தி 11 Jun 2024 5:28 AM GMT (Updated: 11 Jun 2024 5:59 AM GMT)

ஆந்திராவில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின் போது தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை,

ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனால் வெற்றி கொண்டாட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கர்னூல் மாவட்டம் வெல்துர்த்தி மண்டலம் பொம்மிரெட்டி கிராமத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி கிரிநாத் சவுத்ரியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வெற்றியை கொண்டாடி உள்ளார்.

இது தொடர்பாக நேற்றுமுன்தினம் இரவு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாமையா, ராமகிருஷ்ணா மற்றும் பலர் இணைந்து தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி கிரிநாத் சவுத்ரியை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சம்பவ இடத்திலேயே கிரிநாத் சவுத்ரி இறந்தார். இந்த சம்பவத்தை தடுக்க வந்த கிரிநாத் சவுத்ரியின் சகோதரர் கல்யாண் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிந்ததும் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆத்திரமடைந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பைக்கிற்கு தீ வைத்தனர்.


Next Story