சபரிமலை அய்யப்ப பக்தர்களின் விபத்து காப்பீடு முறையில் மாற்றம்

கோப்புப்படம்
அய்யப்ப பக்தர்களின் விபத்து காப்பீடு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த காலங்களில் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழை ஆகிய பகுதிகளில் விபத்தில் மரணம் அடையும் அய்யப்ப பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. நடப்பு சீசன் முதல் இந்த திட்டம் கேரளா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதாவது கேரள மாநில எல்லைக்குள் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் அதில் மரணம் அடையும் அய்யப்ப பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும்.
மேலும் இறந்தவர்களின் உடலை அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மாநிலத்திற்குள் ரூ.30 ஆயிரமும், வெளி மாநில பக்தர்களுக்கு ரூ.1 லட்சம் வரையும் வழங்கப்படும். இதுபோல் மலை ஏற்றத்தின் போது மரணம் ஏற்பட்டால் ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த நிதி ஆன்மிக நல நிதியில் இருந்து வழங்கப்படும்.
இந்த நிதிக்காக ஆன்லைன் மூலம் சாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து ரூ.5 பெறப்படும்.கடந்த ஆண்டு 55 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் கடந்த ஆண்டு 48 பக்தர்கள் சபரிமலையில் மலை ஏறும் போது மரணம் அடைந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






