ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை: டெல்லி சிறப்பு கோர்ட்டில் தாக்கல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை: டெல்லி சிறப்பு கோர்ட்டில் தாக்கல்
Published on

புதுடெல்லி,

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர்.

இதையடுத்து சென்னையை சேர்ந்த ஜாபர்சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மேலும் சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த 5 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து டெல்லி சிறப்பு கோர்ட்டில் கடந்த 2-ந் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்றக்காவல் 16-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரித்தது.

ஜாபர்சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா தயாரிப்பு, ஓட்டல் தொழிலில் முதலீடு செய்தது தெரியவந்தது. அவரது படத்தை பிரபல இயக்குனர் அமீர் இயக்கியுள்ளார். இதனையடுத்து அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். அவரை டெல்லி வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.

இதற்கிடையே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com