மாட்டிறைச்சியை ஆர்வமாக ருசித்த சிறுத்தைப்புலிகள்: புது இடத்தில் உற்சாகமாக வலம் வருகின்றன

நீண்ட விமானப் பயணத்தை கருத்தில்கொண்டு ஆப்பிரிக்க சிறுத்தைப்புலிகள் இந்தியாவுக்கு பட்டினியாகவே கொண்டுவரப்பட்டன.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

குவாலியர்,

இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்துபோன சிவிங்கி இன சிறுத்தைப்புலி இனத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 5 பெண், 3 ஆண் என 8 சிறுத்தைப்புலிகள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டன.

அவற்றை மத்தியபிரதேச மாநிலம் குணோ தேசியப்பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை திறந்துவிட்டார். 750 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட குணோ தேசியப் பூங்காவில் சுதந்திரமாக உலா வருவதற்கு விடப்படுவதற்கு முன் அந்த சிறுத்தைப்புலிகள் சுமார் ஒரு மாத காலத்துக்கு தனிப்பட்ட வளையப்பகுதியில் வைத்து கண்காணிக்கப்படுகின்றன. தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து புதிய இடத்தில் வாழத் தயாராகும் வகையில் இந்த கால அவகாசம் வழங்கப்படுகிறது.

நீண்ட விமானப் பயணத்தை கருத்தில்கொண்டு ஆப்பிரிக்க சிறுத்தைப்புலிகள் இந்தியாவுக்கு பட்டினியாகவே கொண்டுவரப்பட்டன. அவற்றுக்கு நேற்று முன்தினம் மாலை முதல்முறையாக இங்கு உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு சிறுத்தைப்புலிக்கும் தலா 2 கிலோ எருமை மாட்டிறைச்சி கொடுக்கப்பட்டது. அதை அந்த சிறுத்தைப்புலிகள் ஆர்வமாக ருசித்தன. புதிய தேசத்தில் சற்று தயக்கத்துடனே காலடி வைத்த இந்த சிறுத்தைப்புலிகள், மெல்ல மெல்ல இந்த சூழலுக்குப் பழகி வருகின்றன. புது வசிப்பிடத்தை ஆர்வத்துடன் கவனித்தபடி உற்சாகமாக வலம் வருகின்றன.

குறிப்பாக, 'சகோதரிகளான' சவான்னாவும், சாஷாவும் நேற்று மிகவும் விளையாட்டுத்தனமாக காணப்பட்டன. ஒபான், ஆஷா, சிபிலி, சாய்சா என்ற 4 சிறுத்தைப்புலிகளும் உற்சாகத்தை வெளிப்படுத்தின. பிரெடி, ஆல்டன் என்ற இரு சிறுத்தைகள் உல்லாசமாக ஓடியபடியும், அடிக்கடி தண்ணீர் குடித்தபடியும் இருந்தன.

இந்த 8 சிறுத்தைப்புலிகளுக்கும் நமீபியாவில்தான் பெயர் சூட்டப்பட்டது. தற்போதைக்கு அப்பெயர்களை மாற்றும் எண்ணமில்லை என குணோ தேசியப்பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சிறுத்தைப்புலிக்கு மட்டும் 'ஆஷா' என்று இந்தியப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com