

புதுடெல்லி,
சென்னை - கடலூர் இடையே இ.சி.ஆர். சாலை வழியாக புதிய ரெயில் பாதை திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சுதா (மயிலாடுதுறை தொகுதி), "சென்னை - கடலூர் இடையே 179 கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலம் கிடப்பில் உள்ளது. இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்து ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைச் சாலை (இ.சி.ஆர்.) வழியாகச் சென்னைக்கும் கடலூருக்கும் இடையே 179 கிலோமீட்டர் தொலைவிற்குப் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
மாமல்லபுரம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி வழியாகச் சென்னை - கடலூர் இடையே புதிய ரயில் பாதை அமைப்பது ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டமாகும். இருப்பினும், புதுச்சேரி பகுதியில் பாதையை அமைப்பதில் எழுந்த சில சிக்கல்கள் காரணமாக இத்திட்டம் தடைபட்டிருந்தது. தற்பொழுது பொதுமக்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளின் வளர்ச்சித் தேவைகளை நிறைவு செய்யவும் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ரெயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே விருத்தாசலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் வழியாகச் சென்னையும் கன்னியாகுமரியும் ரெயில் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஒட்டுமொத்தப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தப் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி இடையிலான புதிய பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதுடன், அங்குப் பாலம் மற்றும் நிலையப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மேலும், விழுப்புரம் முதல் நாகர்கோவில் வரையிலான 565 கிலோமீட்டர் தூரத்திற்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆய்வு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கான இறுதிச் சுற்றாய்வுப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், 193 கிலோமீட்டர் தூரமுள்ள விழுப்புரம் - தஞ்சாவூர் மற்றும் 113 கிலோமீட்டர் தூரமுள்ள மானாமதுரை - ராமேஸ்வரம் ஆகிய இரட்டை ரெயில் பாதை திட்டங்களுக்கான ஆய்வுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் - திருவாரூர் - காரைக்கால் இரட்டைப் பாதை மற்றும் கும்மிடிப்பூண்டி - குடூர் 3 மற்றும் 4-வது வழித்தடத் திட்டங்கள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட பின், இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளன. கடந்த 3 ஆண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 3,517 கிலோமீட்டர் தொலைவிலான 29 ஆய்வுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதேவேளையில், மாநில அரசின் சார்பில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதம் காரணமாகப் பல திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமல் காகித அளவிலேயே உள்ளது. குறிப்பாக, 2019-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்ட ரூ.734 கோடி மதிப்பிலான ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரெயில் பாதை திட்டத்திற்கு மாநில அரசு நிலம் வழங்கிடாததால் பணிகள் தொடங்கப்படவில்லை.
இதேபோலத் திண்டிவனம் - திருவண்ணாமலை வழித்தடத்திற்குத் தேவையான 276 ஹெக்டேரில் 33 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. அத்திப்பட்டு - புத்தூர், மொரப்பூர் - தர்மபுரி, மன்னார்குடி - பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ஆகிய புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் பெருமளவில் நிலுவையில் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.