சத்தீஷ்கார்: 7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

சத்தீஷ்காரில் கடந்த 20 மாதங்களில், 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் சரகத்தில் 1,837 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள், வன பகுதிகளில் பதுங்கி கொண்டு பயிற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சத்தீஷ்காரின் நாராயணபூர் மாவட்டத்தில் 7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து போலீசில் இன்று சரண் அடைந்தனர். அவர்களில் 9 பேர் பற்றிய தகவல் அளிப்போருக்கு ஒட்டுமொத்தத்தில் ரூ.48 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அவர்கள், மாவோயிஸ்டுகளின் மனித தன்மையற்ற கொள்கைகள், ஒன்றுமறியாத பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தி வருவது ஆகியவற்றால் அதிருப்தி அடைந்துள்ளனர் என மூத்த காவல் அதிகாரியான போலீஸ் சூப்பிரெண்டு ராபின்சன் குரியா கூறினார். கடந்த 20 மாதங்களில், 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் சரகத்தில் 1,837 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர்.






