சத்தீஷ்கார்: 2 நாட்களில் முக்கிய தலைவர் உள்பட 6 நக்சலைட்டுகள் படுகொலை


சத்தீஷ்கார்:  2 நாட்களில் முக்கிய தலைவர் உள்பட 6 நக்சலைட்டுகள் படுகொலை
x
தினத்தந்தி 19 Jan 2026 8:28 AM IST (Updated: 19 Jan 2026 8:29 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் திலீப் பெத்ஜா உள்பட 4 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என துணை முதல்-மந்திரி விஜய் சர்மா கூறினார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் பிஜாப்பூர் மாவட்டத்தில் வன பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என உளவு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், காட்டில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், படையினரை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்டநேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சம்பவத்தில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபற்றி சத்தீஷ்கார் துணை முதல்-மந்திரி விஜய் சர்மா கூறும்போது, மூத்த நக்சலைட்டான திலீப் பெத்ஜா உள்பட 4 நக்சலைட்டுகள் இந்த என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இவர்களில் நேஷனல் பூங்கா பகுதியில் நீண்டகாலத்திற்கு தீவிர நக்சலைட்டு வேலையில் திலீப் ஈடுபட்டு வந்துள்ளார். தாக்குதல், அதற்கான செயல் திட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த அவரை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப கொண்டு வருவதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால், அதில் எந்தவித பலனும் ஏற்படவில்லை. படையினர் அவரை சுட்டு வீழ்த்தி உள்ளனர். தற்போது நேஷனல் பூங்கா பகுதியானது நக்சலைட்டுகளிடம் இருந்து முற்றிலும் விடுபட்ட பகுதியாக மாறி விட்டது என கூறினார்.

கடந்த சனிக்கிழமை, சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் வடமேற்கே வன பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். இதனால், கடந்த 2 நாட்களில், முக்கிய தலைவர் உள்பட 6 நக்சலைட்டுகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

1 More update

Next Story