

சூரஜ்பூர்,
சத்தீஷ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்குவதற்காக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவரது வாகனத்தை மடக்க, வண்டியின் ஆவணங்களை அவர் போலீசாருக்கு காட்டும் போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா அவர் மொபைல் போனை வாங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தார்.
அதுமட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அந்த இளைஞரை ஓங்கி கன்னத்திலும் அறைந்தார். பின்னர் போலீசாரும் அந்த இளைஞரை தாக்கினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும், அதனாலயே அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததாகவும், அவர் மீது அதிவேகமாக சென்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.
இந்த சூழலில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், அந்த நபர் தடுப்பூசி வாங்குவதற்கு வெளியே வந்ததாக கூறினார், ஆனால் சரியான ஆவணம் இல்லை. பின்னர், அவர் தனது பாட்டியைப் பார்க்கப் போவதாகக் கூறினார். அவர் தவறாக நடந்து கொண்ட தருணத்தில் நான் அவரை அறைந்தேன். எனது நடத்தைக்கு நான் வருந்துகிறேன், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், சூரஜ்பூரின் மாவட்ட ஆட்சியரை பணி இடமாற்றம் செய்து சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், சமூக ஊடகங்கள் மூலம், சூரஜ்பூர் கலெக்டர் ரன்பீர் சர்மா ஒரு இளைஞரிடம் தவறாக நடந்துகொண்ட விதம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது மிகவும் வருத்தமாகவும் கண்டிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. சத்தீஷ்கரில், இதுபோன்ற எந்த செயலும் ஏற்றுக்கொள்ளப்படாது. கலெக்டர் ரன்பீர் சர்மாவை உடனடியாக பணி இடமாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு அதிகாரியின் உத்தியோகபூர்வ வாழ்க்கையிலும் இத்தகைய நடத்தை ஏற்கத்தக்கதல்ல. இந்த சம்பவத்தில் நான் வருத்தப்படுகிறேன். அந்த இளைஞரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பூபேஷ் பாகல் பதிவிட்டுள்ளார்.
மேலும் சூரஜ்பூரின் புதிய மாவட்ட ஆட்சியராக கவுரவ் குமார் சிங்கை நியமனம் செய்து முதல்-மந்திரி பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.