

சூரஜ்பூர்,
சட்டிஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவரது வாகனத்தை மடக்க, வண்டியின் ஆவணங்களை அவர் போலீசாருக்கு காட்டும் போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா அவர் மொபைல் போனை வாங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தார்.
அதுமட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அந்த இளைஞரை ஓங்கி கன்னத்திலும் அறைந்தார். பின்னர் போலீசாரும் அந்த இளைஞரை தாக்கினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும், அதனாலயே அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததாகவும், அவர் மீது அதிவேகமாக சென்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், அந்த நபர் தடுப்பூசி வாங்குவதற்கு வெளியே வந்ததாக கூறினார், ஆனால் சரியான ஆவணம் இல்லை. பின்னர், அவர் தனது பாட்டியைப் பார்க்கப் போவதாகக் கூறினார். அவர் தவறாக நடந்து கொண்ட தருணத்தில் நான் அவரை அறைந்தேன். அவருக்கு வயது 23-24க்குள் இருக்கும். ஆனால் 13 வயது அல்ல. எனது நடத்தைக்கு நான் வருந்துகிறேன், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஏ.எஸ் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், சூரஜ்பூர் கலெக்டரின் நடத்தையை ஐ.ஏ.எஸ் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சேவை மற்றும் நாகரிகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. அரசு ஊழியர்களுக்கு பச்சாத்தாபம் இருக்க வேண்டும் மற்றும் எல்லா நேரங்களிலும், இந்த கடினமான காலங்களிலும் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான செயல்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.