சத்தீஷ்கார்: அனல் மின் நிலைய வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; அதிர்ச்சி காரணம் வெளியீடு

பாய்லரில் அதிக அளவு எரிபொருளை சேமித்து வைத்ததில் அழுத்தம் அதிகரித்து, அதனால் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஷ்கார்:  அனல் மின் நிலைய வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; அதிர்ச்சி காரணம் வெளியீடு
Published on

ராய்ப்பூர்

சத்தீஷ்காரின் சக்தி மாவட்டத்தில் சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 14-ந்தேதி ஆலைக்குள் திடீரென பாய்லர் வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது.

இதனால், பாதுகாப்பு தேடி தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு தப்பியோடினர். இதில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த வெடிவிபத்தில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர். தொழிலாளர்கள் 35 முதல் 40 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இந்த தகவல் அறிந்ததும், அவசரகால பொறுப்பு குழுக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு விரைவாக சென்று, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

இதில், பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அதனால், பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். இந்த சூழலில், அனல் மின் நிலைய வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதற்கான அதிர்ச்சி காரணம் வெளியிடப்பட்டு உள்ளது.

இன்னும் 10-க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என அதிகாரிகள் கூறினர்.

முதல்கட்ட தொழில்நுட்ப விசாரணையில், பாய்லரில் அதிக அளவு எரிபொருளை சேமித்து வைத்ததில் அழுத்தம் அதிகரித்து, அதனால் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதனை தடய அறிவியல் ஆய்வகமும் உறுதி செய்து அறிக்கையாக வெளியிட்டு உள்ளது. கடந்த ஓராண்டாக, ஆலையில் பல முறை தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com