மராட்டிய மாநில எல்லைப்பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாததால் 25 கி.மீ. கட்டிலில் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமி

போக்குவரத்து வசதி இல்லாததால் 17 வயது சிறுமியை 25 கி.மீ. கட்டிலில் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த அவல சம்பவம் நடந்து உள்ளது.
மராட்டிய மாநில எல்லைப்பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாததால் 25 கி.மீ. கட்டிலில் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமி
Published on

மலை கிராமம்

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டம் பாகாவந்த் பகுதியில் உள்ளது, மேதாவாடா கிராமம். இந்த மலை கிராமம் மராட்டிய மாநில எல்லைப்பகுதியில் அமைந்து உள்ளது. மேதாவாடா கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை மோசமானது.

சிறுமிக்கு அவர் வசிக்கும் கிராமத்தில் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் அவரை மராட்டிய மாநிலம் கட்சிரோலி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர முடிவு செய்தனர். ஆனால் சிறுமியை அழைத்துவர போதிய வாகன வசதியும் இல்லை.

கட்டிலில் தூக்கி வந்தனர்

இதையடுத்து சிறுமியை அவரது குடும்பத்தினர் கட்டிலில் வைத்து கயிறு கட்டி தோளில் சுமந்து வந்தனர். அவர்கள் சொந்த ஊரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள கட்சிரோலி லகேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தோளில் சுமந்து கொண்டு வந்தனர்.

இதுகுறித்து லகேரி ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அதிகாரி சம்பாஜி போக்ரே கூறுகையில், " சிறுமிக்கு காய்ச்சல், வாந்தி கடந்த சில நாட்களாக இருந்து உள்ளது. அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்" என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்த நிலையிலும், வாகன வசதி இல்லாமல் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி கட்டில் மூலம் 25 கி.மீ. தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com