சத்தீஷ்கார்: தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு படுகொலை

நடப்பு ஆண்டில் இதுவரை 26 நக்சலைட்டுகள் தனித்தனி என்கவுன்ட்டர்களில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
சத்தீஷ்கார்:  தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு படுகொலை
Published on

தன்டேவாடா

சத்தீஷ்காரில் தன்டேவாடா மாவட்டத்தில் கீதம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மரங்கள் அடர்ந்த மலை பகுதியில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணிக்காக மாநில போலீசின் படை பிரிவினர் சென்றனர்.

பிஜாப்பூர் மாவட்டத்தின் கீதம் பகுதியில் குமல்னார், கீர்சாபரா மற்றும் நெல்கோடா கிராமங்களுக்கு இடையே நக்சலைட்டுகள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் பொருட்களை பதுக்கி வைத்து உள்ளனர் என போலீசுக்கு கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த 8 முதல் 10 நக்சலைட்டுகள், போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். எனினும், மலை பிரதேசம், அடர்ந்த காடு மற்றும் இரவு நேரம் ஆகியவற்றை பயன்படுத்தி பலர் தப்பியோடி விட்டனர். தேடுதலின்போது, ராஜேஷ் புனெம் என்ற நக்சலைட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது என தன்டேவாடா காவல் துறை கண்காணிப்பாளர் கவுரவ் ராய் கூறினார்.

அந்த நக்சலைட்டு பற்றிய தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்து நவீன ரக துப்பாக்கிகள், பிஸ்டல் ஒன்று, தோட்டாக்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

நடப்பு ஆண்டில் இதுவரை 26 நக்சலைட்டுகள் தனித்தனி என்கவுன்ட்டர்களில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு 285 நக்சலைட்டுகள் சத்தீஷ்காரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com